Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
முஸ்லிம்களுக்கான தனி அலகைப் பெற்றுத்தர வேண்டியது தமிழர்களினதும் பொறுப்பாகும்.
Posted By Super User on 24/09/2017 | நேர்காணல் | Source: Azzuhoor Cegu Isadeen
முஸ்லிம்களுக்கான தனி அலகைப் பெற்றுத்தர வேண்டியது தமிழர்களினதும் பொறுப்பாகும்.

இன்று பாராளுமன்றத்தில் இல்லாத நிலையில்,  தாங்கள் இருபதாவது திருத்தத்தை எதிர்த்திருப்போம் என்று பதவியிழந்திருக்கும் முன்னாள் அரசியல்வாதிகள் கூறுவது நகைப்பிற்கிடமாக உள்ளது. இவ்வாறு கிழக்கின் எழுச்சியின் செயலாளர் அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன் தெரிவித்தார். அவருடனான பேட்டியிலிருந்து,

கேள்வி : இருபதாவது திருத்தச்சட்டத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள், அதற்கு ஆதரவாக வாக்களித்தது பற்றி?

பதில்: ஏற்கனவே மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறைவாக உள்ள நிலையில், மேலும் மத்திய அரசுக்கு பலம் சேர்க்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படக்கூடாது என்பதிலே அனைவரும் உடன்பட்டிருந்தார்கள். ஆனால் கிழக்கு மாகாணசபை மு.காவின் ஆசியுடன் ஆதரவளித்தது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.

ஆனால் இதன் பின்னர் வெளிப்படுத்தப்பட்ட எதிர்ப்புகளும் கண்டனங்களும் பாராளுமன்றில் மு.காவை மக்கள் விருப்பத்திற்கு இணங்க முடிவெடுக்க வைத்திருக்க வேண்டும். ஆனால் அங்கும் அவர்கள் திருத்தத்திற்கு ஆதரவாகவே வாக்களித்திருக்கின்றனர்.

மக்கள் காங்கிரஸ் இந்த விடயத்தில் ஆரம்பத்திலிருந்து எதிரான நிலைப்பாட்டில் இருந்ததாலும், கிழக்கு மாகாண சபையின் ஆதரவை விமர்சித்ததாலும், அது எதிராக வாக்களிக்கும் என்று நம்பப்பட்டது.

மக்கள் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் கூட எதிர்த்து வாக்களித்த பின், அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலை உருவாகும் என்பதையும் அனுமானித்து வைத்து அதற்கும் தயாராகவே இருந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக மக்கள் காங்கிரஸ் ஆதரித்ததற்குப் பின்னால் ரவூப் ஹகீம் அவர்களின் காய் நகர்த்தல் காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. மக்கள் காங்கிரஸ், பசில் ராஜபக்ஷவுடன் பேரம் பேசிவிட்டார்கள் என்று ரணில் விக்ரமசிங்கவிடம் சொல்லி, ஒரு இக்கட்டான நிலைமையை வாக்களிப்பதற்கு முன்னர் ரவூப் ஹகீம் அவர்கள் ஏற்படுத்தியிருந்ததாக சொல்லப்படுகிறது.

இது குறித்து சூடான வாக்குவாதம் மக்கள் காங்கிரசின் உறுப்பினர்களுக்கும் ரவூப் ஹகீமுக்கும் இடையில் நடைபெற்றதாகவும் தெரிகிறது.

ஆனால் ரவூப் ஹகீமால் இப்படியான சிக்கலுக்குள் மாட்டிவிடப்பட்டு, தமது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பது, மக்கள் காங்கிரஸின் பலவீனமான நிலையையும் தந்திரோபாய அரசியல் காய்நகர்த்தல்களில் அதற்குள்ள அனுபவமின்மையையும் எடுத்துக்காட்டுகிறது.

மாகாணசபைகளில் சிறுபான்மைப் பிரதிநிதித்துவங்கள் குறைவதன் பிரதிகூலங்களை இனி நாம் அனுபவிக்கத் தயாராக வேண்டியதுதான்.

கேள்வி : மாகாணசபைதான் சிறுபான்மையினருக்கான நிரந்தரத் தீர்வு என்று முடிவு கட்டிவிட்டீர்களா?

பதில்: மாற்று தீர்வுத்திட்டங்கள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லாத நிலையில் மாகாணசபைகள் அதிகாரத்ரதுடன் இருக்கும் வரை, அதன் மூலம் கிட்டக்கூடிய நன்மைகளை அடைந்து கொள்வதை விட்டுக்கொடுக்கத் தேவையில்லை.

கேள்வி : வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய மர்மமான காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக சந்தேகப்படுகின்ற நிலையில், அவ்வாறு நடந்தேறுவதைத் தடுக்கும் கடமை யாருக்குள்ளது என்று கருதுகிறீர்கள்?

பதில் : வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்பதுதான் கிழக்கு முஸ்லிம்களின் நிலைப்பாடு. ஆனால் பல தசாப்தங்களாக இணைப்பை வலியுறுத்தும் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு மாற்றமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டி ஏற்பட்டது எமக்கு வருத்தமளித்தாலும், அது பற்றிய எந்த பிரக்ஞையும் அற்றிருந்த முஸ்லிம்களை அவ்வாறு சிந்திக்க வைத்தது தமிழர்களே.

அதற்கு முஸ்லிம் முதலமைச்சர் கொடுப்பதினூடாக பிராயச்சித்தம் செய்துவிட முடியாது. உண்மையில் வடக்குடன் கிழக்கு இணைக்கப்பட்டு தமிழர்களுக்கு ஒரு அதிகாரம் கொடுக்கப்படுமானால், அங்கு முஸ்லிம்களுக்கான தனியான அதிகார அலகு  ஒன்றும் ஏற்படுத்துவதன் மூலம் கிழக்கிலுள்ள முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தலாம். அது விக்னேஸ்வரன் அவர்கள் சொன்னது போன்ற உப்புச்சப்பில்லாத தன்னாட்சி அதிகாரசபை போன்று இருத்தலாகாது. மாறாக தமிழர்களுக்குக் கொடுக்கப்படுவதைப் போன்ற சம அந்தஸ்தும் சம அதிகாரமும் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

இதை உறுதி செய்வதற்கு முஸ்லிம் கட்சிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் பல தசாப்தங்களாக ஒடுக்குதல்களுக்கு உட்பட்டிருந்து அதன் கசப்பை அறிந்து வைத்திருக்கும் தமிழர்களும் முஸ்லிம்களுக்கு அவ்வாறான அதிகாரங்கள் கிட்டுவதை முன்னின்று உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல் கிழக்கு முஸ்லிம்கள் தமிழர்களுடன் மோதும் நிலை உருவாக்கப்படும். இந்த நிலைமை தீவிரப் போக்குடைய பெரும்பான்மையினரால் திட்டமிட்டே ஏற்படுத்தப்படலாம்.

கேள்வி : இருபதாம் திருத்தத்திற்கு அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்திருக்கும் நிவையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் பாரிளுமன்றில் இருந்திருந்தால் உண்மையிலேயே எதிர்த்திருப்பார்கள் என்று நம்புகிறீர்களா?

பதில் : பதினெட்டாம் திருத்தச் சட்டம், திவிநெகும சட்டம், ஷிராணி பண்டாரநாயக்கா விடயம் போன்றவற்றிற்கு அனைத்து முஸ்லீம் அரசியல்வாதிகளும் ஆதரவளித்திருந்தனர். அதை எதிர்க்க வேண்டும் என்று கட்சிக்குள் பலத்த எதிர்ப்பைக் காட்டியவர்களும் கடைசியில் ஆதரவாகத்தான் வாக்களித்திருந்தனர்.

இப்படி சூழ்நிலைக்கைதிகளாக மாறவேண்டிய நிலை ஏற்படுவதற்கு இவர்களின் இணக்க அரசியல் போக்கே காரணமாகும். இனி எதிர்க்கட்சி அரசியல் செய்வதுவே முஸ்லிம்களின் அரசியல் உய்வதற்கு வழியாகும். இதற்கு அரசியல் தலைவர்கள் தயாராவது போல் மக்களும் தயாராக வேண்டும்.

முஸ்லிம்களுக்கான தனி அலகைப் பெற்றுத்தர வேண்டியது தமிழர்களினதும் பொறுப்பாகும்.
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions